search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விருத்தாசலம் வீடுகளில் கொள்ளை"

    விருத்தாசலம் அருகே ஒரே நாளில் நள்ளிரவு நேரத்தில் 6 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவங்கள் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஊத்தங்கால் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45). நெய்வேலி என்.எல்.சி. ஊழியர். இவர் தனது குடும்பத்துடன் என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    இவரது சொந்த கிராமமான ஊத்தங்காலில் உள்ள தனது வீட்டுக்கு விடுமுறை நாட்களில் சென்று வருவது வழக்கம். மற்ற நாட்கள் அந்த வீட்டை பூட்டி விட்டு நெய்வேலி வந்து விடுவார்.

    நேற்று மாலை ஊத்தங்காலில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார். அங்குள்ள வேலைகளை முடித்து கொண்டு வீட்டை பூட்டி விட்டு இரவு நெய்வேலி வந்து விட்டார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் முருகனின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 2½ பவுன் தங்க நகை, வெள்ளிப்பொருட்கள், ரூ.20 ஆயிரம் ரொக்கம், பட்டுப்புடவைகள் மற்றும் எல்.இ.டி. டி.வி., குத்துவிளக்கு உள்பட பல பொருட்களை கொள்ளையடித்தனர்.

    பின்னர் கொள்ளையர் கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.

    இதேபோல் விருத்தாசலம் அருகே உள்ள எம்.பரூர் கிராமத்திலும் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம மனிதர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    வீட்டின் பெட்டியில் இருந்த 10 பவுன் நகை, பட்டுப்புடவைகளை கொள்ளையடித்தனர். இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம்.

    இதையடுத்து கொள்ளையர்கள் அங்கிருந்து அதே பகுதியில் உள்ள மருதமுத்து என்பவரின் வீட்டின் முன்பு சென்றனர். அங்கு மருதமுத்து தனது குடும்பத்தினருடன் வீட்டுக்கு வெளியே தூங்கி கொண்டிருந்தார்.

    இதை சாதகமாக பயன்படுத்திய கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை உடைத்து அதில் இருந்த 2 கிராம் தங்க நகையை கொள்ளையடித்தனர். அங்கு வேறு எந்த பொருட்களும் சிக்கவில்லை. 2 கிராம் தங்க நகையோடு அங்கிருந்து தப்பி சென்றனர்.

    பின்னர் மருதமுத்து வீட்டின் அருகே உள்ள வினோத்குமார் என்பவரது வீட்டையும், நயினார் தெருவில் உள்ள சக்திவேல் என்பவரது வீடுகளின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு ஏதாவது பொருட்கள் உள்ளதா? என பார்த்தனர். அங்கு எதுவும் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    அதனை தொடர்ந்து தெற்குத்தெருவை சேர்ந்த ரவிக்குமார் என்பவரது வீட்டிலும் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

    இதேபோல் வெங்கடேசன் என்பவரது வீட்டுக்கும் கொள்ளையர்கள் சென்றனர். அவரின் வீட்டு பூட்டை உடைக்க முடிய வில்லை. இதனால் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர்.

    அந்த மோட்டார் சைக்கிள் சிறிது தூரம் சென்றவுடன் பெட்ரோல் இல்லாமல் நடுவழியில் நின்று விட்டது. அதனால் அதனை அங்கேயே போட்டு விட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    6 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்தியன், இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் சம்பவங்கள் நடந்த இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    தடயவியல் நிபுணர்கள் வீடுகளில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். இதையடுத்து உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்தியன் உத்தரவின் பேரில் கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்ற னர்.

    கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.

    ஒரே நாளில் நள்ளிரவு நேரத்தில் 6 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவங்கள் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

    ×